திருவண்ணாமலை மாவட்டம், செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் தற்போது, விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியில் வசித்துவருகிறார். விவசாயியான இவருக்கு, இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர் நிலம் உட்பட பல்வேறு விவசாயிகளின் நிலங்கள் அந்தப் பகுதியில் உள்ள பாசன ஏரியை நம்பியிருந்தன.
இந்நிலையில் ஏரி ஆக்கிரமிப்புக்குள்ளானதால், கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் நீர் நிரம்பவில்லை. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உட்பட பல அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார் பிச்சாண்டி. அதற்கான செலவுத் தொகைக்காக அவலூர்பேட்டை, மேல்மலையனூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டிவருகிறார். இதுகுறித்து பிச்சாண்டி கூறுகையில், இந்த பணத்தைக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவை பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக தெரிவிக்கிறார். இவருக்கு அனைத்து தரப்பு மக்களும் அவர்களால் இயன்ற பணத்தை வழங்கிவருகின்றனர்.