
சேலம் அருகே, குடிபோதையில் வந்த விவசாயியைக் காவல்துறையினர் சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறை சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45) விவசாயி. இவர் தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் (ஜூன் 22) மாலை பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடி வழியாகச் சென்றார். அப்போது அவருடன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் மேலும் இரு நண்பர்களும் வந்தனர்.
சோதனைச் சாவடியில் ஏத்தாப்பூர் காவல் நிலைய காவல்துறையினர், வனத்துறை காவலர்கள் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருகேசன் உள்ளிட்ட நான்கு பேரும் மது போதையில் இருந்துள்ளனர். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் சிறப்பு எஸ்.ஐ. பெரியசாமி மற்றும் காவலர்கள், முருகேசனிடம் வாகனத்திற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஏடாகூடமாகப் பேசியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சிறப்பு எஸ்.ஐ. பெரியசாமி, கையில் வைத்திருந்த மூங்கில் பிரம்பால் முருகேசனை ரவுண்டு கட்டி சரமாரியாக தாக்கினார். உடன் இருந்த காவலர்களும் தாக்கியுள்ளனர். அவருடன் வந்த நண்பர்கள், ‘அய்யோ... சார்... சார்... அடிக்காதீங்க சார்... விட்டுடுங்க சார்...’ என்று கெஞ்சினர். அப்போதும் அதைக் காதில் வாங்காத எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி, அவரை தாக்கினார். போதையில் நிலை தடுமாறிய முருகேசன் அங்கேயே மயங்கி விழுந்தார்.
மயக்கம் அடைந்த அவரை, உடன் வந்த நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு, வாழப்பாடி அருகே உள்ள தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
காவல்துறையினர் தாக்கியதில் முருகேசன் கீழே சரிந்து விழுந்தபோது அவருடைய பின்பக்க தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை கவலைக்கிடமாக ஆனதால் புதன்கிழமை (ஜூன் 23) அதிகாலையில் ஆத்தூரில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, முருகேசன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசனின் உறவினர்கள், அவரை தாக்கிய காவல்துறை சிறப்பு எஸ்.ஐ., உடன் இருந்த காவலர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நிவாரண நிதியுதவி, அரசு வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தைப் புதன்கிழமை காலையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி. அபிநவ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், முருகேசனை தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்த விவகாரம், நேற்று (23.06.2021) தமிழ்நாடு சட்டசபையிலும் எதிரொலித்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயி முருகேசன் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அந்தக் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் முருகேசனின் உயிரிழப்புக்குக் காரணமான ஏத்தாப்பூர் சிறப்பு எஸ்.ஐ. பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக மேலும் இரு காவலர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் நடந்து முடிந்த ஒரே ஆண்டில் அதே நாளில், சேலம் மாவட்டத்திலும் காவல்துறையினர் தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்திருப்பது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சம்பவத்தன்று காவல்துறையினர் முருகேசனை தாக்கும் காட்சிகள் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களில் வேகமாக பரவிவருவது காவல்துறையினருக்கும் அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மனித உரிமை ஆணையம், இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரிக்கு உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கரோனா பரவல் குறைவாக உள்ள தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மது போதைப் பழக்கம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடிக்கின்றனர். மேலும், மதுபானத்தைத் தேடி மாவட்டம்விட்டு மாவட்டம் சென்றும் குடித்துவருகின்றனர்.
அதன்படி, மதுவுக்கு அடிமையான முருகேசனும் சம்பவத்தன்று கல்வராயன் மலையடிவாரத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி வழியாக வந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், நிதானம் இழந்திருந்த முருகேசன் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியதால்தான் தாக்குதல் நடந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். உயிரிழந்த முருகேசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.