விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் பாக்கியராஜ் (41), விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்துவந்துள்ளது. திருமணமாகாத இவர், சம்பவத்தன்று அதிக அளவில் மது அருந்திவிட்டு வளவனூரிலிருந்து நாரையூர் செல்லும் சாலையின் அருகே உள்ள ஒரு பாலத்தின் 12 அடி உயரமுள்ள தடுப்பு சுவர் மீது ஏறி படுத்து தூங்கியுள்ளார் பாக்கியராஜ்.
மது போதை காரணமாக நிதானம் இழந்து தூங்கிக்கொண்டிருந்த பாக்கியராஜ், தூக்கக் கலக்கத்தில் பாலத்தின் மேலிருந்து பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்குப் பலமான அடிபட்டது. அந்த வழியாகச் சென்ற சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுபோதை காரணமாக ஒருவர் தூக்கத்தில் தவறி விழுந்து இறந்த சம்பவம் வளவனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.