Skip to main content

சிதம்பரத்தில் பலரை ஏமாற்றிய போலி சப் இன்ஸ்பெக்டர் கைது.

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

சிதம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர் உடையில் பலரை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

fake police arrested


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் காவலர்கள் புதன்கிழமை இரவு காந்திசிலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்பொழுது சிதம்பரம் மந்தகரை காமாட்சிம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சக்கரபாணி(35) குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். இது குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  சக்கரபாணியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இந்நிலையில்  புதன்கிழமை சப்- இன்ஸ்பெக்டர் உடையில்  சிதம்பரம் நகர காவல் நிலையம் வந்த பெண், தான் சென்னையில் தொழிற்நுட்ப பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக  பணியாற்றி வருவதாகவும் சக்கரபாணியை விடுக்க கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

இதனையொடுத்து அந்த பெண்ணிடம் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டபோது அந்த பெண் போலி சப்- இன்ஸ்பெக்டர் என்பதும், அவர் சிதம்பரம் மந்தகரை காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜதுரை(31) மனைவி சூரியபிரியா(27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சப்- இன்ஸ்பெக்டர் உடையணிந்து போலீஸார், வாகன சோதனையில் பணம் வாங்குவது. கிராம நிர்வாக அலுவலர், பஸ்சில் இலவசமாக பயணம் செய்வது என பலரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து  சிதம்பரம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து சூரியபிரியா  மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் கணவர் ராஜதுரை, சக்கரபாணி ஆகிய 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


சூரியபிரியா சப் -இன்ஸ்பெக்டர் உடையில் கடலூர் மாவட்டத்தில் யார், யாரை ஏமாற்றினார் என்ன முறைகேடுகளில் ஈடுப்பட்டார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீ சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டிருப்பது சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்