கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்லவும் இ-பாஸ் பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது. இ-பாஸுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பித்த சில நிமிடங்களில் அவை ரிஜக்ட் செய்யப்படுகிறது.
தந்தையின் மறைவு, நெருங்கிய உறவினர்களின் மறைவுக்குச் செல்வதற்குக் கூட இ-பாஸ் வழங்காமல் ரிஜக்ட் செய்தனர் ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும். இதனைப் பயன்படுத்திக்கொண்டு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் அறிந்தவர்கள் குறுக்கு வழியில் இ-பாஸ் வழங்கினார்கள். அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ் ஜெராக்ஸ்களை கொண்டு அதேபோல் தாங்களே இ-பாஸ் உருவாக்கி வழங்குவது, மேலும் இ-பாஸ்க்கு அப்ரூவல் வழங்கும் அரசின் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி அல்லது ஊழியர்களில் ஒருவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பணம் தந்து அப்ரூவல் வாங்குவது என நடந்துக்கொண்டு இருந்தது. இந்த புரோக்கர் மோசடி வெளியே வந்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் புரோக்கர்கள் மற்றும் மோசடிக்காரர்கள் இ-பாஸ் மூலம் ஆயிரம், ஆயிரமாகச் சம்பாதித்தனர்.
இந்நிலையில் இ-பாஸ் மோசடி குறித்து உயர்நீதிமன்றம் கண்டிப்பு, மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது, மக்களிடம் கொதிப்பு போன்றவை அதிகரித்ததுதம், புரோக்கர்கள் மற்றும் இ-பாஸ் மோசடி குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ-பாஸ் மோசடியில் ஈடுப்பட்ட இரண்டு கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள்.
திருவண்ணாமலை நகரத்தில் ரோஸ் கம்ப்யூட்டர் என்கிற பெயரில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் சென்டரில், போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்குவதாக அதிகாரிகளுக்குச் சென்ற தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை அங்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வில் அந்த கம்ப்யூட்டர் சென்டரில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கியது கண்டறிந்து அந்த கம்ப்யூட்டர் சென்டர்க்கு சீல் வைத்தனர்.
அதேபோல் சமூக வலைத்தளத்தில் சென்னை, பெங்களுரூ, ஆந்திரா, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்குச் செல்ல எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இ-பாஸ் ரெடி, வாகனம் ரெடி எனத் தொடர்ச்சியாக தகவல் பரப்பினார் விக்ரம் என்பவர். இதுபற்றிய தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குச் சில இளைஞர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரின் உத்தரவுப்படி, காஞ்சி சாலையில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கும் காவல்துறை மூலமாகப் பூட்டி சீல் வைத்துள்ளனர். எந்த அடிப்படையில் அவர்கள் இப்படித் தகவல் பரப்பினார்கள், இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் எப்படிக் கிடைத்தது என விசாரணை நடைபெற்றுவருகிறது.
போலி இ-பாஸ் தயாரித்து விற்பனை செய்தவர்கள் அடுத்ததாக கைது செய்யப்படலாம் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.