திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே போலி போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு, போலீஸ் வாகனம் போல் சைரன் வைத்த ஜீப்பில் சந்தேகத்துக்கிடமான நபர் வருவதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே காத்திருந்த போலீசார், அவ்வழியே வந்த போலீஸ் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். ஜீப்பிலிருந்து இறங்கியவர், அசிஸ்டன்ட் கமிஷனர் எனக்கூறி தன்னை மடக்கிய போலீசாரை மிரட்டியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லியுள்ளார்.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்ற நபர், போலியாக அடையாள அட்டை தயாரித்து, தன்னை போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறிக்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றிருப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், விஜயன் சென்னையில் மூன்றாண்டுகளாக பிரபல கட்சி நடத்தும் சேனலில் பணியாற்றியுள்ளார். அப்போது ஏற்பட்ட போலீஸ் அதிகாரிகளின் பழக்கம் மற்றும் பல விஐபிகளின் பழக்கம் விஜயனை திசைமாற்றியுள்ளது. போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதன் விளைவாக நடை, உடை, பாவனை என அனைத்தையும் மாற்றிக்கொண்டு அசிஸ்டன்ட் கமிஷனர் அவதாரம் எடுத்துள்ளார் விஜயன். இதில் எதிர்பார்த்த அளவைவிட மரியாதையும், செல்வமும், செல்வாக்கும் கிடைத்ததால் தனது பயணத்தை இந்தியா முழுவதும் தொடர்ந்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் கியூ பிரான்ச் இன்டலிஜன்ட் போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு அனைத்து இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார்.
அதேபோல் கேரளா கட்டப்பனைக்குச் சென்றவர், க்யூ பிரான்ச் விசாரணைக்கு வந்திருப்பதாகக் கூறி, இரண்டு நாட்கள் தங்கி, இரண்டு போலீஸார் பாதுகாப்புடன் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவந்துள்ளார். “மற்ற மாநிலங்களுக்கு எப்படி போன” என கேட்ட போலீசாரிடம், “இலங்கைக்கே சென்று வந்துவிட்டேனே” என அதிர வைத்துள்ளார். விசாரணை எல்லையின் உச்சகட்டமாக, தன்னை மடக்கிப் பிடித்த போலீஸிடம் தன் செல்ஃபோனில் இருந்த ஐந்து படங்களைக் காட்டியுள்ளார். அதில் ஐந்து மாநில முதல்வர்கள், ஒரு ஆளுநர் உட்பட பலருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போலீஸாரைத் தூக்கிவாரிப் போட்டது. கில்லாடியாக இருப்பாரோ என்ற கோணத்தில் இரண்டு துணை சூப்பிரண்டுகள், 5 டி.ஸ்.பி.கள் என போலீஸ் பட்டாளமே குவிந்து அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் அவரோ தான் எந்தத் தவறும் செய்யவில்லை. அசிஸ்டன்ட் கமிஷனர் உடையும், பதவியும், காரும் தனக்குப் பிடித்திருந்தது. அதனால் ராஜ மரியாதையுடன் வலம் வந்ததாக கூறியுள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவன பெண் வாங்கி கொடுத்த ஜீப்பினை ரூபாய் 2 லட்சம் செலவில் போலீஸ் வாகனம் போல் ஜோடித்துள்ளார். சைரன் முதல் வாக்கி டாக்கி வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இவர் போட்ட கெட்டப், சீரியஸ் போலீஸா இல்லை சிரிப்பு போலீஸா என விடை தெரியாமல் விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். ‘கஸ்டடி எடுத்திருந்தால் கக்கியிருப்பார், சீக்கிரம் முடித்துவிடுங்கள்’ என மேலிடம் கொடுத்த உத்தரவால், அவர் கையில் வைத்திருந்த இரண்டு டம்மி துப்பாக்கிகள் மற்றும் போலி போலீஸ் ஜீப்பை பறிமுதல் செய்து, வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.