மனிதர்களின் காதுகளில் குறிப்பிட்ட அதிர்வெண்கள் கொண்ட ஒலி மட்டும் நுழைய வேண்டும். இந்த ஒலி அளவை டெசிபல் கணக்கில் குறிப்பிடுவார்கள். அதன்படி மனிதர்களால் அதிகபட்சமாக 140 டெசிபல் வரையிலான ஒலியை கேட்க முடியும். ஆனால், 85 டெசிபலுக்கு மிகையான ஒலிகள் மனிதனின் செவிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடியவை. இவற்றால் சில நேரங்களில் காது சவ்வு கிழிந்து காதுகள் செவிடாகும்.
போக்குவரத்து வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்களுக்கும் டெசிபல் அளவு குறிப்பிடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட டெசிபல் அளவுள்ள ஹாரன்களை மட்டுமே கம்பெனிகள் தயாரிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ஹாரன் தயாரிக்கும் கம்பெனிகளும், வாகன ஓட்டிகளும், இதனை ஆய்வு செய்யும் அதிகாரிகளும் இதனை பொருட்படுத்துவதில்லை. பொது மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மிக அதிக அளவு டெசிபல் கொண்ட ஏர் ஹாரன்களை கனரக, இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒலி எழுப்பக்கூடாத மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் இந்த அதிக டெசிபல் ஹாரன் கொண்ட வாகனங்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அதிக ஒலி எழுப்புகின்றன. அதேபோல், இந்த அதிக டெசிபல் ஹாரன் கொண்ட வாகனங்கள் மற்ற வாகனங்களை முந்திச் செல்லும்போது எழுப்பும் ஒலியால் மற்ற வாகன ஓட்டிகள் சில நேரங்களில் பதற்றமடைந்து விபத்தைச் சந்திக்க நேரிடுகிறது.
இதுபோன்று விபத்துக்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படுகிறது. காரணம் இந்த சாலையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள 5க்கும் மேற்பட்ட சிமெண்டு ஆலைகளுக்குச் சரக்கு ஏற்ற இறக்கச் செல்லும் கனரக வாகனங்கள் மிக அதிக டெசிபல் ஒலி அளவை கொண்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றன.
இந்த சாலையில் ஐந்து காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால், அவர்களும் முறையாக இந்த அதிக டெசிபல் ஹாரன் கொண்ட வாகனங்களைச் சோதனையிடுவதில்லை எனும் குற்றச்சாட்டு எழுகிறது. அதேபோல், பெண்ணாடம் - திட்டக்குடி பகுதிகளில் அதிகமான இருசக்கர வாகனங்கள் மிக அதிக அளவு ஒலியெழுப்பும் ஏர் ஹாரன்கள் கொண்டுள்ளன. இப்படிப்பட்ட வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.