நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.
இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.
ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.