Skip to main content

இங்கிலாந்திலிருந்து ஈரோடு வந்த 16 பேருக்கு கரோனா பரிசோதனை! 

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

Erode people return from england


உலக அளவில் தொடர்ந்து கரோனா வைரஸ் தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவில் இதன் தாக்கம் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு சற்று குறையத் தொடங்கியுள்ளது.


இந்நிலையில், இப்போது இங்கிலாந்தில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண கரோனா வைரஸ் பாதிப்பைவிடக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், இது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும் கூறியிருக்கிறார்கள்.


இதைத் தொடர்ந்து உலகில் உள்ள பல நாடுகள், இங்கிலாந்து நாட்டுக்கான விமானப் போக்குவரத்துச் சேவையை நிறுத்திவிட்டது. இந்தியாவும் இங்கிலாந்து நாட்டுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.

 

இங்கிலாந்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பியவர்களையும் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக சுகாதாரத் துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்களைக் கண்டறிந்து வருகிறார்கள்.


அதுபோல், சென்ற 15ஆம் தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து ஈரோடு திரும்பி வந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் கணக்கெடுத்தனர். 

 

அதில் 16 பேர் இங்கிலாந்திலிருந்து ஈரோடுக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பெயரில் இங்கிலாந்தில் இருந்து கடந்த 15ஆம் தேதி முதல் நேற்று வரை ஈரோடுக்கு வந்த 16 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள், இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்துள்ளனர். பிறகு அங்கிருந்து கார் மூலம் ஈரோடுக்கு வந்துள்ளனர். அவர்கள் 16 பேரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு அங்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இருந்தாலும் இங்கிலாந்தில் தற்போது பரவிவரும் ஒரு புதிய வகை கரோனா தொற்று காரணமாக 16 பேருக்கு, மீண்டும் இன்று (23.12.2020) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

 

இந்தப் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருந்தால் அந்த சாம்பிலை பூனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவைத்து, அது எந்த வகையான கரோனா எனக் கண்டறியப்படும். இப்போது இங்கிலாந்தில் இருந்து ஈரோடு திரும்பிய இந்த 16 பேரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்தந்த பகுதி சுகாதாரத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் தினமும் அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்கள் உடல்நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.


அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது வரை இங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பியவர்கள் நலமாகத்தான் உள்ளார்கள் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்