ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ராமசாமி மற்றும் அவரது சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து, கடந்த 2010- ஆம் ஆண்டு, அந்த ஊரில் 8 சென்ட் நிலம் வாங்கியுள்ளனர்.
அந்த நிலத்திற்கு அருகே அதே ஊரைச் சேர்ந்த ஒருவரும் விவசாயத் தோட்டம் அமைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2016- ஆம் ஆண்டு ராமசாமி தான் வாங்கிய நிலத்தில் வீடு கட்டியுள்ளார். 2017- ஆம் ஆண்டு வீடு கட்டும் பணிகள் முடிந்து, அதில் குடியேற வீட்டில் பால் காய்ச்சும் நிகழ்ச்சி செய்திருக்கிறார். அப்போது பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர், இது என்னுடைய நிலம். உங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால், வீட்டை இடித்து விடுவேன் என்று கூறி மிரட்டல் மற்றும் தொந்தரவு செய்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, சசிகலா தம்பதியினர், இது குறித்து காவல்துறையினர் மற்றும் பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்காததால், விரக்தியில் இருந்த ராமசாமி சசிகலா தம்பதியினர் இன்று (05/01/2022) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டு, அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். மாவட்ட ஆட்சியரைக் கண்டதும் திடீரென ராமசாமி, சிவகாமி தம்பதியினர் தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, உடனடியாக அவரும், அவருடன் வந்திருந்த பாதுகாவலர்களும், அவர்கள் இருவரிடமிருந்த பாட்டிலைப் பறித்தனர். அவர்கள் மீது உடனே தண்ணீர் ஊற்றப்பட்டது. அவர்களிடம் நடந்த விவரத்தை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். பிறகு அவர், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை என்னிடம் கூற வேண்டும். இதுபோல் தீக்குளிக்க முயற்சி செய்வது தவறாகும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை உடனே எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து அந்த தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீட்டைக் கட்டி உள்ளோம். அந்த வீட்டையும், நிலத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் நாங்கள் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து தீக்குளிக்க வந்தோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தீவிர விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தனர். அதையடுத்து, தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.