தந்தை என்ற தகுதியையே தரம் கெட்டதாய் மாற்றி எந்த மிருகமும் செய்யாத துணியாத கொடுமையை தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு செய்த அந்த மகாபாவிக்கு இதுதான் சரியான தண்டனை என்ற குரல்கள் நீதிமன்றம் முழுக்க இன்று காலை எதிரொளித்தது.
ஆம் நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறும் அந்த சம்பவம் இதுதான். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது கருமாண்டி செல்லிபாளையம் என்ற ஊர். இங்கு வசிக்கும் குருநாதன் ஒரு கட்டிட தொழிலாளி. குருநாதனுக்கு முதலில் ஒரு மனைவி அவர் என்ன காரணத்தினாலோ இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். குருநாதனுக்கு குடிப்பழக்கம் நீண்ட நாளாக இருந்து வந்ததோடு சதா எந்நேரமும் போதையிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் எட்டு வயதில் ஒன்றும், ஏழு வயதில் ஒரு குழந்தையும் இருந்துள்ளது. குடிகாரரான குருநாதன் போதை போல காமத்திலும் எல்லை மீறி தான் தனது மனைவியிடம் நடந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு சண்டையும் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் குருநாதன் பெற்றெடுத்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளிடமே பாலியல் சீண்டல் செய்துள்ளார். குழந்தைகள் என்றும் பாராமல் போதையில் பாலியல் சீண்டலில் குழந்தைகளை சீரழிக்க தொடங்கியிருக்கிறார். இந்தக் கொடுமையை நேரில் கண்ட அவரது மனைவியை நெஞ்சம் பதறிப்போய் இப்படி ஒரு தகப்பன் உலகத்திலேயே இருக்கக்கூடாது என முடிவெடுத்து சென்ற 2016ஆம் ஆண்டு காவல்நிலையம் சென்று பெற்ற குழந்தை என்றும் பாராமல் என் கணவன் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்தார் என புகார் கொடுத்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு போலீசார் குருநாதனை கைது செய்தனர். அந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடமாக நடந்து வந்தது. அதன் தீர்ப்பு தான் இன்று அறிவிக்கப்பட்டது. ஈரோடு மகிளா கோர்ட் நீதிபதி மாலதி வழங்கிய தீர்ப்பு இதுதான்,
பெற்ற குழந்தைகளுக்கு அன்பும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கவேண்டிய ஒரு தந்தை மிருகமாக மாறி குழந்தைகளை சீரழித்தது நிரூபணமாகியுள்ளது. ஆகவே இதற்குத் தண்டனையாக ஒவ்வொரு குழந்தையை சீரழித்ததற்கும் தலா இருபது ஆண்டுகள் என மொத்தம் நாற்பது ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் பத்தாயிரம் ரூபாய் அபதாரம் செலுத்த வேண்டும். அபதாரம் செலுத்த தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பெற்ற குழந்தைகளை சீரழித்த இந்த மகாபாவிக்கு 40 ஆண்டுகாலம் சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒவ்வொரு குழந்தைக்கும் தலா இரண்டு லட்சம் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்புக்குப் பிறகு குற்றவாளி குருநாதன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.