உலகம் முழுக்க பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 124 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியானதாகத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.
இதில் குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற ஒரு மத அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் அதிகம் பரவியுள்ளது. தமிழகத்திலிருந்து அந்தக் கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளார்கள். இதில் ஈரோட்டில் இருந்து மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அதில் கலந்து உள்ளார்கள். அப்படிப்பட்ட நபர்களில் திங்கள்கிழமை (30.03.2020) வரை 24 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் நேற்று பரிசோதனையில் நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி என சில மாவட்டங்களில் இருந்து டெல்லி சென்றவர்கள் உள்பட 50 பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் மொத்தமாக கரோனா வைரஸ் தொற்று 57 பேருக்கு தமிழக்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் தமிழ்நாட்டில் 124 பேருக்கு இது உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பலரும் தங்களது விவரங்களைத் தெரிவிக்காமல் உள்ளார்கள். ஈரோட்டில் இருந்து சென்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முழுமையான விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
மத்திய அரசு அறிவித்துள்ள கரானா வைரஸ் மிகவும் தீவிரமாக உள்ள மாவட்டங்களில் ஈரோடு மாவட்டமும் ஒன்றாக உள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிதாக இந்த நோய்த்தொற்று ஏற்படவில்லை. வெளி மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்தவர்கள், தாய்லாந்திலிருந்து ஈரோட்டுக்கு வந்தவர்கள் என அவர்கள் மூலமாகத்தான் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதில் முழுமையாக தங்களது விவரங்களைக் கொடுக்காமல் பலரும் உள்ளார்கள்.
மாநில அரசு அறிவித்துள்ளபடி வெளி மாநிலங்களில் இருந்து நேரடியாக ரயில் மூலம் வந்தவர்கள், சாலை மார்க்கமாக வந்தவர்கள் விவரங்கள் அரசுக்கு இதுவரை பட்டியல் வரவில்லை.
ஈரோட்டில் ஏற்கனவே 27 வீதிகள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 74 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்பட்டு உள்ளார்கள்.அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் 86 பேர் உள்ளார்கள் ஆனால் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு வந்தவர்கள் விவரம் தெரியாததால் அவர்கள் மூலம் ஈரோடு பகுதியில் மேலும் பலருக்கும் இந்த தொற்றுநோய் பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது.
குறிப்பாக அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடிவுசெய்த அமைப்பு, அதன் நிர்வாகிகள் இது பற்றிய விவரங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. மாநில அரசு இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட நபர்களுக்குக் கூறி உள்ளது. ஆனாலும் இன்று வரை அந்தத் தகவல்கள் தெரியவில்லை என்பதால் ஈரோடு நகர மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிர் பயத்தில் இருக்கும் மக்களுக்கு இது மேலும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.