அறிவு வேள்வியாக தொடர்ந்து 15 வருடமாக ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் மாலையில் இலக்கிய நிகழ்வாக அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பல்வேறு ஆளுமைகள் கொன்டவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றி வருகிறார்கள்.
இதில் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக ஆறாம் தேதி மாலை நடைபெற்ற நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் அவர்கள் 'அளவுக்கு மீறினால்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
''இப்போதெல்லாம் குடும்ப உறவில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு உண்மையாக இருப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சியும் செல்போனும்தான். தொலைக்காட்சியில் வருகிற தொடர்கள் பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டினாலும், அது குடும்பத்தில் பாசம், அன்பு, நட்பை பேணுவதாக இல்லை. அதேபோல் செல்போனில், வாட்ஸ் - அப் பில் பலர் கூட்டு குடும்பத்தையே நடத்துவதாக கூறுகிறார்கள். இவையெல்லாம் குடும்ப உறவுகளை முழுமையாக சீர்குலைக்கும் ஆயுதங்களாக இருக்கிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்த சமூகத்தில் குடும்ப உறவே இல்லாத நிலை ஏற்படுகிற சமூகமாக இன்றைய சூழல் வெளிக்காட்டி வருகிறது. ஆகவே இதிலிருந்து நமது குழந்தைகளை தற்காத்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது'' என கூறினார்.
இதனைத் தொடர்ந்து 'தலை நிமிர் காலம்' என்ற தலைப்பில் ஜெகத் கஸ்பர் உரையாற்றுகையில், ''இன்றைய மனித சமூகம் இரண்டு போதையில் உள்ளது. ஒன்று கடவுள் என்கிற ஆன்மீக போதை. இரண்டாவது மது போதை. இந்த இரண்டும் ஆய்வுக்கு உட்பட்டது தான். தமிழ் மொழி எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. தமிழ் மொழியில் இல்லாத பண்பாட்டு தீர்வு உலக இலக்கியத்தில் இல்லை. இன்றைய காலம் மிகவும் கடினமான காலமாக உள்ளது. சமூகத்தில் தமிழ் மொழியில்தான் குடும்பம், உறவு, பண்பாடு என எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. எனவே தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியில் நமது குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும். அதோடு தமிழின் தொன்மையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உலகில் உள்ள ஏராளமான மொழிகள் அழிந்ததுபோல் தமிழை அழிக்க பல சக்திகள் பூத்துள்ளது. ஆகவே நாம் இன்று தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். தமிழில் உள்ள தொன்மைகளை நாம் உலகுக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியில் உள்ளோம். அதற்கு இது போன்ற அறிவு சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும்'' என்றார்.