ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுபெற்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது யார் யாருக்கு வழங்கப்படுகிறது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 2016 -ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், "கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.