Skip to main content

வேட்பு மனுத்தாக்கல்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Election Commission made an important announcement for Nomination

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், “வேட்பாளர்கள் நாளை (20.03.2024) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் நாளில் பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நுழைய அனுமதி இல்லை. தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அஞ்சல் வழியாக வாக்களிப்பதற்கு மார்ச் 25 ஆம் தேதிக்குள் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வட சென்னை தொகுதிக்குப் பழைய வண்ணாரப்பேட்டை வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யலாம். மத்திய சென்னை தொகுதிக்கு செனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யலாம். தென் சென்னை தொகுதிக்கு அடையாறில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்