''என்ன ஒரு தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவையும், எடப்பாடி பழனிசாமியையும் ஒரே மேடையில் வைத்து செங்கோலை பிடிக்க செய்திருக்கிறார்'' என வாட்ஸ் அப்புகளில் இந்த செய்தியும், அது சம்மந்தமான வீடியோ ஒன்றும் கடந்த சில நாட்களாக பரவுகிறது.
இந்த வீடியோவில் ஜெயலலிதா செங்கோலை பிடிக்கும்போது, எம்ஜிஆர் ஒருவரை அழைத்து அவரையும் செங்கோல் பிடிக்க சொல்லுவார். அவர் எடப்பாடி பழனிசாமியா? என்று தற்போது உள்ள அதிமுகவினரே இதனை பார்த்து இது உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கவும், விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமியை தொடர்பு கொண்டோம்.
இடைத்தேர்தல் நடக்கக்கூடிய நேரத்தில் இந்த வீடியோ திடீரென பரவுகிறதே? அந்த வீடியோவில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமியா?
''எப்போதும் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதிமுக தலைவர் யார் என்பதை கொடி பிடிக்கும் தொண்டன் முடிவு எடுப்பான் என்று எம்ஜிஆர் சொல்லுவார். அதற்காகத்தான் பொதுச்செயலாளர் தேர்வு கூட அடிப்படை தொண்டன் உள்பட அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதியை கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் ஒரு செங்கோலை கொடுக்கும்போது கூட சாதாரண அடிப்படை தொண்டரை அழைத்து கொடுக்க சொல்கிறார். அந்த தொண்டர் எடப்பாடி பழனிசாமி இல்லை.
இந்த வீடியோவில் உள்ள மாநாடு நடந்த ஆண்டு 86. அதிமுகவின் தொடக்கக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி இல்லை. 88ல்தான் அதிமுகவில் அவர் சேருகிறார். முழுக்க முழுக்க அவர் சசிகலா ஆதரவாளர். ஜெ அணி, ஜானகி அணி என்று இருந்தபோது, ஜெ. அணியின் எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. சேவல் சின்னத்தில் அவர் வெற்றி பெற்றாலும், அவர் அமைச்சரானது 2011ல் தான். அதிமுகவில் இருந்த முத்துசாமி 2010ல் திமுகவுக்கு சென்றார். எடப்பாடி தொகுதியில் உள்ள முத்துசாமி திமுகவுக்கு சென்றதால், அந்த பகுதியில் இருந்து ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமியை அமைச்சராக்கினார்கள்.
அதிமுக கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு பிடிமானம் இல்லை. தற்போது இந்த எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தி வருகிறார். ஒரு சில டீம், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் பலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இப்படி ஒரு வீடியோவை போட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். இது அவருக்கு தெரிந்து செய்தார்களா? தெரியாமல் செய்தார்களா என்று தெரியவில்லை'.