அ.தி.மு.க. பொதுக்குழுத் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தைப் புறக்கணிக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அ.தி.மு.க.வில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று மனுவில் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, எம்.சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்துள்ள மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், மனுவிற்கு எண்ணிடும் நடைமுறை முடிந்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.