
திருச்சி மாவட்டம் எடமலைபட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 44). இவருக்கும் ஆஷா மெர்சி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெற்றோர் ஆசியுடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஆஷா மெர்சி நாகு என்ற தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். குமரவேல் இன்டீரியர் டெக்கரேட்டர் ஆக பணியாற்றி வருகிறார். இருவருடைய வாழ்க்கையும் ஏழு வருடங்கள் சந்தோஷமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் விதி அபிஷேக் குமார் என்பவன் ரூபத்தில் உள்ளே நுழைந்தது.
பீமநகரைச் சேர்ந்த செல்வகணபதி என்ற உதவி ஆய்வாளரின் மகன் தான் அபிஷேக் குமார் (வயது 25). திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு எஸ்.ஐ செல்வகணபதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, எடமலைப்பட்டி புதூர் நாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு உதவியாக அவரது மகன் அபிஷேக் அடிக்கடி மருத்துவமனை வந்து சென்றதில், ஆஷா மெர்சியின் துறுதுறுப்பும், அழகும் அபிஷேக்கை என்னவோ செய்ய, ஆஷா மெர்சிக்கு தூண்டில் போட்டுள்ளான். அப்புறம் என்ன தன்னுடைய இரண்டு குழந்தையை மறந்து காதல் வளையத்தில் விழுந்தாள். குறுகிய காலத்தில் காதலாக மாறியது.
இந்த தொடர்பு குறித்து அறியாத குமரவேல், நாள் தோறும் மனைவி வேலைக்கு தான் செல்கிறாள் என்ற எண்ணத்தில் மருத்துவமனையில் இறக்கி விட்டு மீண்டும் அழைத்து சென்றுள்ளார். ஆனால் மனைவி ஆஷா மெர்ஸியோ மருத்துவமனையை காதல் பூங்காவாக மாற்றி, தங்கள் நெருக்கத்தை செல்பியாகவும் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
இந்த சூழலில், கடந்த மாதம் இரண்டாம் தேதி ஆஷா மெர்ஷி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மனைவியை பல இடங்களில் தேடிய குமரவேல், இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்
புகாரின் பெயரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் திடீர் காதலர் அபிஷேக் குமாரை ஆஷா மெர்சி திருமணம் செய்து கொண்டது உறுதியானது.
இந்த திருமணம் குறித்து, எந்த தகவலும் தெரியாத கணவர் குமரவேல், மனைவியிடம் பேச பலமுறை கெஞ்சியும் ஆஷா மெர்சி கேட்காததால், பெண் குழந்தையிடம் செல்போனை கொடுத்து பேச வைத்துள்ளார். அப்போது, ''அம்மா நீ எங்கம்மா இருக்க, ஏம்மா வீட்டுக்கு வரமாட்டுற? நீ வரலைன்னா நானும் தம்பியும் செத்துடுவோம்'' என்று குழந்தை கூற, ''அம்மா வீட்டுக்கு வர மாட்டேம்மா, நீயும், தம்பியும் இங்கே வந்துடுங்க'' என்று ஆஷா மெர்சி கூறுகிறார்.
சரி, ''நீ எங்கம்மா இருக்க'' என்று மகள் கேட்க, ''நான் எங்கே இருக்கேனு தெரியல'' என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார் ஆஷா. இதையடுத்து, தன்னுடைய மனைவி நல்லவள்தான். அபிஷேக் தான் ஆசை வார்த்தை கூறி மனைவியை அபகரித்துக்கொண்டான் என்று, எடமலைபட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளரின் மகன் என்பதால் விசாரணை தள்ளிப் போய்க் கொண்டிருக்க இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர் உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. முதல் கணவர் குமரவேல் உயிருடன் இருக்க சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அபிஷேக்கை திருமணம் செய்துள்ளார்.
அதேபோல அபிஷேக் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்துள்ள அவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறாத நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் தெரிவித்தனர்.
தற்போது ஆஷா மெர்சி அபிஷேக்குடன் வசித்து வருகிறார். ஆஷா மெர்சியின் குழந்தைகள் இருவரும் தாயை காணாது கதறி துடிக்கின்றனர்.
“அபிஷேக்கோ காவல்துறை அதிகாரியின் மகன் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்காமல் என்னை மிரட்டுகின்றனர். உன் மனைவி உன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும் அவனோடு தான் வாழ்வேன் என்று போலீசார் கூறுவதாக தெரிவித்த குமரவேல் தனது இரு குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக ஆஷா மெர்சியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கண்ணீர் விடுகிறார்.
ஆனால் ஆஷா மெர்சியோ” எனக்கும் குமரவேலுக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது. ஆனால் அதனை மறைத்து என்னை திருமணம் செய்துகொண்டார்.
இனி குமரவேலுடன் வாழ தயாராக இல்லை. அபிஷேக் உடன் தான் வாழ்வேன். குழந்தைகளை என்னிடம் அவர் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றத்தை நாடி உரிய தீர்வு பெற்றுக் கொள்வேன் என்கிறார்.
அபிஷேக்கோ, ஒருபடி மேலே போய் “வாழ்ந்தால் ஆஷா மெர்சியுடன் தான் வாழ்வேன். இல்லையென்றால் சாவதை தவிர வேறு வழியில்லை” என்கிறார்.
காதல் வேறு, காமம் வேறு என்பதை இருவரும் உணராமல் ஏற்கனவே நடைபெற்ற திருமண பந்தத்தை சட்டரீதியாக முறிக்காமல் திடீர் காதலுடன், பெற்ற குழந்தைகளை நடுரோட்டில் தவிக்கவிட்டு கட்டிய முதல் கணவரையும் நடைபிணமாக்கிய இந்த விவகாரம் திருச்சியில் பரபரப்பாக பேசப்படுகிறது.