தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (10.07.2021) திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தன்னுடைய தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அறநிலையத்துறையில் தொடர்பான எல்லா பணிகளும் மிக சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அனைத்து துறைகளையும் முதல்வர் கூர்ந்து கவனித்து அதனை முறைப்படுத்தி செயல்படுத்திவருகிறார் என்றும் கூறினார். மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் அமைச்சர் கே.என். நேரு, ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் கோவிலின் கோசாலைக்கு வரக்கூடிய பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கோவில் வளாகத்திற்குள்ளேயே ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து கூடுதலாக வரக்கூடிய பசுக்களை அங்கு வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள கோசாலையைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரித்திட அனைத்துப் பணிகளும் தற்போது செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், கோவில் திருப்பணியாளர்களுக்கு, மற்ற தொழிலாளர்கள், ஓதுவார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களில் ஐந்து வருடத்திற்கு மேல் பணியாற்றிவருபவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். மேலும், இவர்கள் நிரந்தரம் செய்யப்பட்ட பிறகு மீதம் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் முறையாக நிரப்பி, திருப்பணிகள் மிகச்சிறப்பாக நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல் கோவில்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் சிலைத் திருட்டு என்பது அதிகளவில் நடந்துள்ளது. பல இடங்களில் சிலைகளை மாற்றி வைத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை தற்போது பாரபட்சமின்றி, தவறு செய்திருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அந்த வழக்கு விசாரணையை விரைவில் முடித்துவைப்போம் என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கத்தில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய இந்த அடிமை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 1890களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீரங்கத்திற்கு சொந்தமாக கிடைத்த 330 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமாக 24 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளது. மற்ற இடங்களில் குடியிருப்புகள் கடைகள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வந்து அதில் குடியேறியுள்ளனர். அதேபோல் இந்தக் கோவிலைச் சுற்றி இருக்கக்கூடிய மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைப்பதாக கூறி, அனைத்து பொதுமக்களும் கோவிலுக்கு வாடகைதாரர்களாக மாற வேண்டும். முறையாக கோவிலுக்கு சேர வேண்டிய வாடகையை செலுத்திவிட்டால் கோவில் திருப்பணிகளுக்கான எல்லா வளர்ச்சியும் நடைபெற அது உதவியாக இருக்கும். இது சம்பந்தமாக தொடரப்பட்டிருக்கக்கூடிய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் மலைக்கோட்டை பகுதியில் மலை கோட்டையைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் நிச்சயம் அரசு கையகப்படுத்தி, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை எப்போதும் தயாராகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், கோவில் திருப்பணியாளர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே முதலில் அந்த ஓய்வூதியர்களுக்கான பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையையும் அதேபோல் அந்த ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தொடர்பான ஆலோசனையை முதல்வரோடு கலந்தாலோசித்து விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் வழங்கப்பட்டுவந்த அன்னதானமானது நோய் தொற்றால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவில்களில் பொட்டலங்களாக தற்போது அன்னதானம் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது. எனவே விரைவில் நோய்த்தடுப்பு முற்றிலும் குறைந்து தமிழகம் முழுமையாக அதிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது கோவில்களிலேயே அன்னதானம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்” என்று கூறினார்.