கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக போலீஸ் உடையில் ஒருவர் சுற்றியுள்ளார். அவர் சாலை வழியே இருசக்கர வாகனங்களில் வருகின்ற சிறு சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரை வழிமறித்து, 'ஏன் மாஸ்க் போடல', 'லைசன்ஸ் இல்லையா', 'ஹெல்மெட் போடலயா', 'ஓவர் லோடு வண்டியா?' என வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
இவர் போலீஸ் சீருடையில் இருந்ததால், வாகன ஓட்டிகள் உண்மையான போலீஸ் என்று நம்பி பயந்துகொண்டு பணம் கொடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் வைத்திருந்த லைசென்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு அவைகளை எடுத்துச் சென்று விடுவார். இந்தச் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்த டூப்ளிகேட் போலீசிடம் பணம் பறிகொடுத்தவர்கள் உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் காவல் நிலையங்களுக்குச் சென்று விவரம் கேட்டுள்ளனர். அப்போதுதான் போலீஸ் எனக்கூறி டூப்ளிகேட் போலீஸ் ஒருவர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் டூப்ளிகேட் போலீஸ் குறித்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நேற்று மாலை உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில், போலீஸ் சீருடையில் இருந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்தான் டூப்ளிகேட் போலீஸ் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் சீருடையில் சென்று வழிப்பறி செய்து வந்ததாக அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த நபர் 49 வயது நிரம்பிய கஜேந்திரன் என்றும் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 35 ஆயிரம் பணம், போலீஸ் சீருடை, அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.