காட்டுமன்னார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இரு பாலர் மாணவ மாணவிகளும் கல்வி பயின்று வருகிறார்கள். மாணவ மாணவிகள் தினம் தோறும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து செல்வதால் பல பேருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை.
இந்த நிலையில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், ஆய்வாளர் விமலா ஆகியோர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கல்லூரியில் உள்ள ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர்.
இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற தகுதியான 48 மாணவ மாணவிகளுக்கு இணையவழி மூலம் பணம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை தயக்கமில்லாமல் ஓட்டும் வகையில் பயிற்சி அளித்து போக்குவரத்து விதிகள் கூறப்பட்டது. அதனடிப்படையில் சிதம்பரம் அருகே சி முட்லூர் கிராமத்தில் உள்ள சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 48 மாணவ மாணவிகளுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து வட்டார அலுவலர் மற்றும் ஆய்வாளர் ஓட்டுநர் உரிமத்தை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான கட்டணம் கட்ட கூட முடியாத சூழ்நிலையில் கல்லூரி ஆசிரியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதவியதின் பேரில் தற்போது ஓட்டுநர் உரிமம் கிடைத்துள்ளதாகவும். இனிமேல் சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை இயக்குவோம் என்றும் இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் சென்று இதுபோல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது.