மணல் திருட்டை காட்டிக் கொடுத்ததால் இரட்டை கொலை;
கொலையாளிகள் 4 பேருக்கு 2 ஆயுள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பது வழக்கமாகிவிட்டது. பல இடங்களில் மண் மீதும் மணல் மீதும் அக்கரை கொண்ட இளைஞர்கள் மணல் திருட்டை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கும் இளைஞர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் பல அதிகாரிகள் மணல் திருடர்களிடமே தகவல் சொன்னவர்களை காட்டிக் கொடுத்துவிட்டு கூடுதல் மாமூல் வாங்கிச் செல்லும் அவல நிலையும் உள்ளது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள செங்காலகுடியை சேர்ந்த நாட்டாமை துரைகண்ணு. மகன்கள் கார்த்திகேயன்(30), ராஜேஷ் (எ) மகேஷ்வரன்(24) அண்ணன் தம்பிகளான இவர்கள் அந்த பகுதியில் நடந்த மணல் திருட்டுகளை போலீஸ் மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் அளித்து தடுத்து வந்தனர். அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாததால் பல முறை மிரட்டப்பட்டுள்ளனர்.
இதேபோல் கடந்த 2013 நவம்பரில் செங்கலாக்குடியை சேர்ந்த கணேசன் மகன் ராஜேந்திரன்(33) அந்த பகுதியில் உள்ள காட்டாற்றில் திருட்டு மணல் எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார். இதனையும் கார்த்திகேயன், ராஜேஷ் ஆகியோர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தன்னுடைய தம்பி முத்தழகு(29), நண்பர்கள் சுப்பிரமணியன் மகன் நடராஜ்(32), கருப்பையா மகன் மூர்த்தி (எ) புண்ணியமூர்த்தி ஆகிய நான்கு பேரும் கடந்த 2013 நவம்பர் 4 ந்தேதி அன்று செங்கலாகுடியில் பலத்த ஆயுதங்களால் வெட்டினர். இதில் சம்ப இடத்திலேயே கார்த்திகேயன், ராஜேஷ் இறந்தனார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த இரட்டை கொலை குறித்து வழக்குபதிவு செய்த மாத்தூர் போலீசார் விசாரனை செய்து நான்கு குற்றவாளிகளையும கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமராஜ் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் இன்று 12.12.17 செவ்வாய் கிழமை தீர்ப்பு கூறினார்..
அந்த தீர்ப்பில் அண்ணன் தம்பிகளான கார்த்திகேயன், ராஜேஷ் ஆகியோரை கொலை செய்ததற்காக ராஜேந்திரன் இவருடைய தம்பி முத்தழகு, நடராஜ், மூர்த்தி ஆகிய நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் நான்கு பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தும் இதனை கட்ட தவறினால் மேலும் 3 மாத காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து மாத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெராமன், ஏட்டு பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இரட்டை ஆயுள் தண்டனையால் புதுக்கோட்டை கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இரா.பகத்சிங்