Skip to main content

காதலுக்கு ஆதரவாக இருந்த 2 பேரை கழுத்தை இறுக்கிக் கொன்ற மாபாதகர்கள்; இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

double life sentence for two in omalur case

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இரண்டு வாலிபர்களை ஈவிரக்கமின்றி கழுத்தை இறுக்கிக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 26 ஆண்டுகளாக நடந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவருடைய உறவினரின் மகளை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்தார். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் வீட்டை விட்டு ஊட்டிக்குச் சென்றனர். அவர்களை முருகேசனும் உறவினர்களும் மீண்டும் ஊருக்கு அழைத்து வந்து பெரியவர்கள் கூடிப்பேசி பிரித்து விட்டனர். அதே வேகத்தில் பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணமும் செய்து வைத்தனர்.

 

காதலர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே உள்ளூரைச் சேர்ந்த பெரியண்ணன் (25), சசிகுமார் (25) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். காதல் ஜோடியை பிரித்த பிறகும் கூட முருகேசன் தரப்புக்கு பெரியண்ணன், சசிகுமார் ஆகியோர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 1997ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி முருகேசன், அவருடைய நண்பர் சின்ன குஞ்சு என்கிற கந்தசாமி (56), சங்கர் என்ற முருகன் ஆகிய மூன்று பேரும் பெரியண்ணன், சசிகுமார் ஆகிய இருவரையும் முருகேசனின் தென்னந்தோப்புக்கு சமாதானம் பேச அழைத்துள்ளனர். அப்போது சந்தனக் கட்டை கடத்தலாம் என்றும், அதன்மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும், மதுபானம் குடிக்கலாம் என்று கூறி சசிகுமாரின் கையில் பணத்தைக் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கி வருமாறு அவரை அனுப்பி வைத்தனர். 

 

அவர் சென்ற சிறிது நேரத்தில் தனியாக இருந்த பெரியண்ணனை தென்னை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், கயிற்றால் கழுத்தை இறுக்கி அவரை துடிக்கத் துடிக்கக் கொலை செய்தனர். மதுபானங்களை வாங்கி வந்த சசிகுமாரையும், அதேபோல் தென்னை மரத்தில் கட்டி வைத்து கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொன்றனர். இதையடுத்து, முருகேசனுக்குச் சொந்தமான டிராக்டர் வாகனத்தில் இரண்டு சடலங்களையும் ஏற்றிக்கொண்டு சென்ற அவர்கள், ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட எலகுமலை பெருமாபாளையம் அருகே வீசிவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல் ஊருக்குள் வந்துவிட்டனர். 

 

சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, சித்தோடு காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி விசாரித்து வந்தனர். சடலங்களின் சட்டை கழுத்துப் பட்டையில் இருந்த தையல்காரரின் பெயரை வைத்து கொலையுண்ட நபர்களின் அடையாளங்களை காவல்துறையினர் கண்டறிந்தனர். இரட்டைக் கொலைக்குக் காரணமான முருகேசன், கந்தசாமி, சங்கர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். நிகழ்விடம் ஓமலூர் எல்லைக்கு உட்பட்டது என்பதால், சித்தோடு காவல்துறையினர் இந்த வழக்கை ஓமலூர் காவல்நிலையத்திற்கு மாற்றினர். 

 

இந்த வழக்கின் விசாரணை சேலம் 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான சங்கர் என்கிற முருகன் இறந்துவிட்டார். அதையடுத்து மற்ற இரண்டு பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. கொலை நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வழக்கின் விசாரணையை வேகப்படுத்துமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் துரைராஜ் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடந்த 26 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் வியாழக்கிழமை (மார்ச் 23) தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட முருகேசன், கந்தசாமி ஆகிய இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். அத்துடன் 82 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அதில் 41 ஆயிரம் ரூபாயை கொலையுண்ட பெரியண்ணன் மனைவி வளர்மதியிடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

 

கொலை சம்பவத்தில் 26 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், குற்றவாளிகள் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்