Skip to main content

பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு மருத்துவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

Doctors' Association struggle  demanding justice

 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குரும்பட்டி கிராமத்தில், முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாசலம்-லெட்சுமி தம்பதியின் மகளான 12 வயது சிறுமியை, பாலியல் வல்லுறவுக்குப் பின் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த குற்றவாளியை, தண்டிக்க சரியான ஆதாரம் இல்லை எனக் கூறி விடுதலை செய்தது நீதிமன்றம். இச்சம்பவத்தைக் கண்டித்தும், உடனடியாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏழை சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் இன்று சலூன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

குற்றவாளிகளை கைது செய்து, அரசே மேல்முறையீடு செய்து தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். விருதுநகர் மாவட்டம் முடிதிருத்தும் தொழிலாளி ராஜா தம்பதியை தொழில் செய்ய விடாமல், ஊர் நீக்கம் செய்த, சாதிய வன்கொடுமை ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேராவூரணி வட்டார மருத்துவர்கள் சங்கம் சார்பில், வெள்ளிக்கிழமை அனைத்து சலூன் கடைகளையும் அடைத்து, பேராவூரணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, பட்டுக்கோட்டை சங்கத் தலைவர் தாயுமானவன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் செ.மதிவாணன் முன்னிலை வகித்தார். மாநில ஆலோசகர் என்.ஆர்.பாலமுருகன் சிறப்புரையாற்றினார். பேராவூரணி சங்கத் தலைவர் ராஜா, செயலாளர் நீலகண்டன், பொருளாளர் கதிரேசன் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மறைந்த சிறுமிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போராட்டம் காரணமாக பேராவூரணி தொகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலும் சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்