நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் களத்தில் நிற்கிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், இந்தியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசி, ஐ.ஜே.கே, கொங்கு கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி தனது கூட்டணி இறுதியாகிவிட்டது என அறிவித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதியதமிழகம், புதியநீதிக்கட்சி என சில கட்சிகளோடு கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது.
திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும், விஜயகாந்த் தின் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தன. அந்த கட்சி யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடனே கூட்டணி எனச்சொல்லி வந்தது. இதனால் இழுப்பறி இருந்துவந்தது. இந்தநிலையில் தான் 4 தினங்களுக்கு முன்பு எங்கள் கூட்டணி இறுதியாகிவிட்டது என அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதனால் தேமுதிகவின் நிலை தாழ்ந்தது. திமுக அறிவிக்கும்வரை தேமுதிகவுக்கு 6 சீட் என சொல்லி வந்த அதிமுக, திமுக கூட்டணி கதவை சாத்தியதும், தேமுதிகவுக்கு வேறுவழியில்லையென 3 சீட்டாக குறைத்தது. இதனால் தேமுதிக தலைமையான விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் அதிர்ச்சியாகினர்.
இந்நிலையில் மார்ச் 6ந்தேதி சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜகவை சேர்ந்தவரும், பிரதமருமான மோடி வந்துயிருந்தார். அன்று விஜயகாந்த் மோடியுடன் மேடையேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் நிகழ்ச்சிக்காக மேடையில் வைக்கப்பட்ட பேனரில் விஜயகாந்த் படம் பொறிக்கப்பட்டது.
அதே நாளில், திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செல்போனில் பேசி, உங்களுடன் கூட்டணிக்கு வருகிறோம், அதுப்பற்றி எங்கள் கட்சி நிர்வாகிகள் சேலம் இளங்கோவன், அனகை முருகேசன் உங்களை வந்து சந்திப்பார்கள் எனச்சொன்னார். அதன்படி அவர்கள் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
அதே நேரத்தில் சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை, சுதிஷ் சந்தித்து சீட் பேரம் நடத்தினார்.
தங்களை வைத்து தேமுதிக சீட் பேரம் நடத்துகிறது என்பது உணர்ந்த துரைமுருகன், தேமுதிக எங்களுடன் கூட்டணிக்கு வர துடிக்கிறது என்பதை போட்டு உடைத்தார். இதனால் தேமுதிக தலைமை அதிர்ச்சியானது.
தேமுதிகவின் செயலால் அதிர்ச்சியான பாஜக, அதிமுக போன்றவை அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மோடியின் பிரச்சார மேடையில் வைக்கப்பட்டுயிருந்த பேனரில் இருந்து விஜயகாந்த் படத்தை அவசரம் அவசரமாக எடுத்துவிட்டனர். மோடி வந்து சென்றபின், பாஜகவினர், பிரேமலதா, சுதிஷ்சை கடுமையாக பேசியுள்ளனர்.
இதனால் மார்ச் 7ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த சுதிஷ், இளங்கோவன், அனகைமுருகேசன், தனிப்பட்ட விவகாரங்களுக்காக துரைமுருகனை சந்தித்தோம் என்றார்கள். துரைமுருகன், தனது கட்சி தலைமை குறித்து என்னவெல்லாம் என்னிம் பேசினார் தெரியும்மா?, அதை வெளியில் சொன்னால் அவருக்கு தான் அசிங்கம் என்றார். சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்ப, சந்திப்பை அவசரம்மாக முடித்துக்கொண்டு கிளம்பினார்.
திமுக, தங்கள் பேர அரசியலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி, தங்களை அம்பலப்படுத்தியதை பிரேமலதா, சுதிஷ்சால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வேலூரில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம், துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துங்கள் என்றனர்.
அதன்படி மார்ச் 8ந்தேதி காலை 10 மணியளவில் வேலூர் காட்பாடி, காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டை தேமுதிக நிர்வாகிகள் 20 பேர் கட்சி கொடியுடன் சென்று முற்றுகையிட முயன்றனர். அனுமதி பெறாமல் ஒருவரின் இல்லத்தை எப்படி முற்றுகையிடலாம் என காட்பாடி போலிஸார், தேமுதிகவினரை விரட்டியடித்தனர். அவர்கள் போகாமல் துரைமுருகன் ஒழிக, ஒழிக என கோஷமிட்டனர். அவர்களை முன்னேற விடாமல் போலிஸ் தடுத்ததால் வேலூர் – சித்தூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் கோபமான போலிஸார், காலை நேரத்தில் மறியல் ஈடுப்பட்டதால் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் பயந்துப்போன தேமுதிகவினர் சிலர் அங்கிருந்து ஓட முயன்றனர். ஆனால், அவர்களை விடாமல் போலிஸார் துரத்தி, துரத்தி கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.
இதில் ஒரு கூத்து என்னவென்றால், துரைமுருகன் வீட்டை முற்றுகையிடப்போகிறோம் வாருங்கள் என தொண்டர்களுக்கு போன் செய்து அழைக்க, யாரும் வராததால் நொந்துப்போய் தாங்களே சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.