திருவண்ணாமலை மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து நிர்வாகம் செய்கிறது திமுக தலைமை. அதன்படி வடக்கு மா.செவாக முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தமும், தெற்கு மா.செவாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏவும் தேர்வாகினர்.
வடக்கு மா.செ சிவானந்தம் மீது சொந்த கட்சியினர், கூட்டணி கட்சியினர் என பலதரப்பில் இருந்தும் புகார் மேல் புகார் தலைமைக்கு சென்றது. இருந்தும் அவரை மாற்றுவதில் சில சிக்கல்கள் இருந்ததால் அவரை மாற்றாமல் வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம், கடனாக வாங்கிய தொகையை தரவில்லையென கரூர் பைனான்ஸ் உரிமையாளர்கள் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் புகார் தந்தனர். இதனால் அவரை நள்ளிரவில் அழைத்துவந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து விசாரித்துவிட்டு அனுப்பினர்.
இந்நிலையில் பிப்ரவரி 15ந் தேதி திமுக தலைமை கழகத்தில் இருந்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடக்கு மா.செவாக இருந்த சிவானந்தம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, வந்தவாசியை சேர்ந்த எம்.எஸ்.தரணிவேந்தன் என்பவரை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியில் வடக்கு மாவட்ட துணை செயலாளராக இருந்தார் தரணிவேந்தன். 2006 – 2011ல் ஒன்றிய குழு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.