சென்னை மடிப்பாக்கத்தில் திமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சென்னை 188வது வார்டு பகுதியில் திமுக வட்ட செயலாளராக இருந்த செல்வம் என்பவர் கூலிப்படையைச் சேர்ந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் விக்கிரவாண்டி அருகே தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கூலிப்படையின் தலைவனாக ரவுடியான முருகேசன் செயல்பட்டது தெரியவந்தது. ஆனால் இந்த கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பது பற்றிய பின்னணி கொலையை நிகழ்த்திய கூலிப்படைக்கே தெரியவில்லை.
இந்நிலையில் வியாசர்பாடியைச் சேர்ந்த முருகேசனை நேற்று நள்ளிரவு காவல்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே வில்லிவாக்கத்தில் ஒரு பகுதியில் நடந்த கொலை சம்பவத்திலும் இதே முருகேசன் கூலிப்படை தலைவனாக செயல்பட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து கூலிப்படை தலைவன் முருகேசனிடம் திமுக வட்ட செயலாளர் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.