திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் திமுக 8 இடங்களும், அதிமுக 6 இடங்களில், சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்று இருந்தனர். திமுக சார்பில் பேரூராட்சி செயலாளர் செல்வராஜ் தாயார் பூசராணியை சேர்மன் வேட்பாளராக அறிவித்தது திமுக தலைமை.
நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலன்று பூசராணி தனக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து திமுகவின் 3வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரியும் பேரூராட்சி தலைவருக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தது திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இதுபற்றி மகேஸ்வரியிடம் திமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மகேஸ்வரிக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள், திமுக கவுன்சிலர்களுடன் மல்லுக்கு நின்றனர். இந்த தகவல் வெளியே குவிந்திருந்த இரண்டு கட்சி தொண்டர்களுக்கு தெரியவந்ததும், காவல்துறையின் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்ததால் காவல்துறை தடியடி நடத்தினர்.
இதில் ஆளுங்கட்சியான திமுகவினரை போலீசார் விரட்டி விரட்டி தாக்கினர். அதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரண்டு தரப்பும் அடித்துக்கொண்டனர். இதில் மூவர் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கவுன்சிலர் மகேஸ்வரி காவல்நிலையத்தில், பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் ஒன்றை தந்துள்ளார். அதில், என்னை அதிமுகவினர் கடத்திச் சென்று அடைத்துவைத்து தேர்தலில் சேர்மனுக்கு போட்டியிட வேண்டும் என மிரட்டினார்கள் என புகார் தந்துள்ளார். இது உதயேந்திரம் பேரூராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.