பட்டியலின மாணவி மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சினிவாசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் பேசும்போது, திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் கண்டன உரை நிகழ்த்தினார்.
அப்போது அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேசுகையில், கலைஞரின் குடும்ப கடனை அடைத்தவர் எம்ஜிஆர். அதிமுகவை ஆரம்பித்து 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தவர். திமுக ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டு காலம் கோட்டை பக்கம் கலைஞரால் செல்ல முடியவில்லை. இன்றைக்கு அப்படிப்பட்ட மாபெரும் தலைவர் எம்ஜிஆரை ஆ.ராசா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இந்த ஆட்சியில் சொத்துவரி மின்கட்டணம் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆகவே பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அதிமுக பெரும். பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த திமுக குடும்ப உறுப்பினர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றார். முடிவில் பகுதி செயலாளர் பூபதி நன்றி கூறினார்.