திமுக எம்எல்ஏ கலந்து கொண்டதால் சுதந்திர தின விழாவை அதிகாரிகள் புறக்கணிப்பு
திருவொற்றியூரில் திமுக எம்எல்ஏ தேசிய கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி மண்டல அதிகாரிகள், சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் சென்ற பிறகு வந்து கொடியேற்றி கொண்டாடினர். இது, பொதுமக்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மாதவரம் மண்டல அலுவலகத்தில் நேற்று காலை தேசிய கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை சுமார் 8.30 மணியளவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுதர்சனம் மற்றும் திமுக நிர்வாகிகள் புழல் நாராயணன், ராமகிருஷ்ணன், துக்காராம், பரந்தாமன் உள்ளிட்டோர் வந்தனர்.
ஆனால், காலை 9 மணி வரை மண்டல அதிகாரிகள் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதையடுத்து எம்எல்ஏ சுதர்சனம் மற்றும் நிர்வாகிகள், மண்டல அலுவலகத்துக்கு சென்று பார்த்தனர். அங்கும் அதிகாரிகள் யாரும் இல்லை. பின்னர், 10 மணி வரை காத்திருந்தனர். அப்படியும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். 10 மணிக்கு மேல் ஆகியும் கொடியேற்ற அதிகாரிகள் வராததால், எம்எல்ஏ சுதர்சனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் சென்றதை அறிந்த பின்னரே செயற்பொறியாளர் ராமமூர்த்தி, கொடியேற்று நிகழ்ச்சிக்கு வந்தார். அதை தொடர்ந்து, காலை 10.15 மணிக்கு தேசிய கொடியை ராமமூர்த்தி ஏற்றி வைத்து மரியாதை
செலுத்தினார்.