கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சிலர் கரோனா தாக்கம் புரியாமல் இருசக்கர வாகனங்களில், சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.
ஊரடங்கு உத்தரவால் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளனர். திமுக தனது பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்வதையும் தள்ளி வைத்துள்ளது. அதே நேரத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாக தொடர்புகொண்டு பேசிவருகிறார். அதேபோல் திமுக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கரோனா வார்டாக பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு மனு தந்துள்ளது திமுக.
அதேபோல் மாநில அளவில் மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலும் திமுகவினர் களம் இறங்கியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தினமும் உணவு வழங்குவதை, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான காந்தி ஏற்றுக்கொண்டு பிரியாணி வழங்கி வருகிறார். அதேபோல் அவர்களுக்கு முக கவசம், கையுறை போன்றவற்றையும் வழங்கியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தெற்கு மாவட்ட திமுக சார்பில் இரண்டு வாகனங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்வுக்காக வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறையினருக்கு முகக்கவசம், கை கவசம், கை கழுவ கிருமி நாசினி போன்றவற்றை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மருத்துவர் எ.வ.வே.கம்பன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மார்ச் 31ந்தேதி, திருவண்ணாமலை மாவட்ட தலைநகரத்தில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், கை கவசம், முகக் கவசம் போன்றவற்றை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட செய்தியாளர்கள் மன்றத்திற்கு வந்து வழங்கினார்.