மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக
திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
தமிழக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 9 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இன்று காலை திமுக சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில், தேர்தலை நடத்த கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-க்குள் வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் செப்டம்பர் 18-க்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய 1 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் அறிவிப்பும் தள்ளிப்போகிறது. இதனையடுத்தே திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கை தாக்கல் செய்துள்ளார். திங்கட்கிழமை இந்த மனு விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.