தமிழ்நாட்டில் முதன்முறையாக பிடிஎஃப் வடிவிலான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், சுமார் மூன்று மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார்.
திருத்திய வரவு, செலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும் எனக் கூறிய நிதியமைச்சர், அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளைத் திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், தி.மு.க.வின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மற்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, எ.வ.வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில், சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.