தீபாவளியையொட்டி மான், முயல், காட்டுப்பன்றி வேட்டைக்காக வனத்துக்குள் நுழைவோரை கண்காணிக்க தனிப்படைகளை அமைத்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளி நாளன்று அமாவாசையாக இருப்பதால் அன்றைய தினம் அசைவ பிரியர்கள் இறைச்சி வகைகளை உண்பதில்லை. அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை (நாளை) ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் அலைமோதும்.
சேலத்தில், விடுமுறை நாள்களில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வனத்துக்குள் புகுந்து இறைச்சிக்காக மான், முயல், காட்டுப்பன்றிகளை வேட்டையாடி வருவது தொடர்கிறது. இந்த ஆண்டு அப்படியான அத்துமீறல்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக சிறப்பு தனிப்படைகளை அமைத்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வன அலுவலர் முருகன் கூறுகையில், ''விழாக்காலங்களில் அடுத்தடுத்து வரும் கரி நாள்களில் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவதற்காக கிராம மக்கள் நாய்களுடன் வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகின்றனர்.
இம்முறை, ஆரம்பத்திலேயே அவர்களை கண்காணித்து பிடிக்க அனைத்து வனச்சரகத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுவாகவே, வனக்குப்பதிக்குள் அத்துமீறி நுழைவதே குற்றமாகும். வனப்பகுதிக்குள் நுழைந்து மதுபானங்கள் அருந்துவோரை பிடித்து வழக்குப்பதிவு செய்யவும் தீர்மானித்து இருக்கிறோம்,'' என்றார்.