தீபாவளியன்று சரவெடி வெடிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நவம்பர் 14- ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை மக்கள் தவிர்க்க வேண்டும். குறைந்த ஒலி, குறைந்த மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க வேண்டும். தீபாவளியன்று காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையும், இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியை பெற்று பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி வெடிக்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், குடிசை பகுதிகள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மாசற்ற தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளது.