விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் முகப்பில் நடந்து செல்லும் சாலையின் குறுக்கே இரும்பு பைப் லைன் போடப்பட்டுள்ளது. இதில் நடந்து சென்ற முதியவர் கால் சிக்கி தவித்த காட்சி எல்லோரையும் பதைபதைக்க வைத்தது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மெயின் சாலையில் இருந்து உள்ளே செல்லும் முகப்பில், சாலையின் குறுக்கே பத்துக்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகள் இடைவெளிவிட்டு பதிக்கப்பட்டுள்ளன. நேற்று விழுப்புரம் அருகிலுள்ள பாணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது தேவராஜ், தனது மகளுடன் ஆதார் கார்டு திருத்தம் செய்வதற்காக, ஆட்சியர் வளாகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்பொழுது இரும்பு பைப்பை கடப்பதற்காக நடந்து செல்லும்போது, இவரது கால் இரும்பு பைப்புகளின் இடையில் சிக்கிக் கொண்டது.
காலை வெளியே எடுக்க முடியாமல் பெரியவர் தேவராஜ் பட்ட சிரமம் பார்ப்போரை பதைபதைக்க வைத்தது. இதைக்கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று, பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து இரும்புப் பைப்புகளை விரிவுபடுத்திய பிறகு, முதியவரை மீட்டுள்ளனர். பிறகு அவரை சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முன்பு, மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்பிரமணியம், ஆட்சியர் அலுவலகத்தினை மட்டும் உள்ளே வைத்து, அதனைச் சுற்றிலும் அரண்மனை போன்று சுவர் எழுப்பி உள்ளார். மூன்று இடங்களில் அரண்மனைக் கதவுகள் போன்று பெரிய கதவுகளைப் பொருத்தி பூட்டி வைத்துள்ளார்.
அதைத் திறந்து விடுமாறு, அவரிடம் அப்போது பல தரப்பினர் வேண்டுகோள் விடுத்தும், அவர் சட்டை செய்யவில்லை, அந்த கேட் இப்போது வரை திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின் பகுதியில், மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு வரும் மாற்றுத் திறனாளிகள், கேண்டீனில் சாப்பிடுவதற்கு, 500 மீட்டர் தூரம் வரை மெயின் கேட்டு வழியாகச் சுற்றிக் கொண்டு செல்கிறார்கள்.
இதுகுறித்து பல்வேறு தரப்பு மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், காவல்துறை அலுவலகத்திற்கும் இடையில் உள்ள பூட்டப்பட்டுள்ள கேட்டை திறந்துவிடுமாறு கோரிக்கை வைத்தும் முறையிட்டும் கூட திறக்கப்படவில்லை. இப்போதுள்ள மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும் அதைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், பெண்கள், சிறு குழந்தைகளைச் சுமந்து வரும் பெண்கள், காவல்துறை அலுவலகத்திற்கும் கேண்டீனுக்கும் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இது மிகுந்த சிரமமாக உள்ளது. அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், பூட்டப்பட்டு கிடக்கும் கேட் திறக்கப்பட வேண்டும். பெரும் திட்ட வளாகத்தின் முகப்பு சாலையில் குறுக்கே போடப்பட்டுள்ள இரும்புப் பைகளை அகற்றிவிட்டு, சிமெண்ட் மூலம் அதைச் செப்பனிட வேண்டும். மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கும் ஆட்சியர் அலுவலகத்திற்கு இடையிலுள்ள பூட்டப்பட்ட கேட்டை நிரந்தரமாக திறந்துவைக்க வேண்டும். இந்த நேரத்திலாவது தற்போதைய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இதைச் செய்வாரா என்று பொதுமக்கள் ஆவலோடு கோரிக்கை வைக்கிறார்கள்.