திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே சந்தையூர் ஊராட்சி வலையபட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார், கோட்டாட்சியர் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.
முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து திட்ட விளக்க உரை நிகழ்த்தினர். பின்னர் 264 பயனாளிகளுக்கு ரூபாய் 5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவே தாய்மார்கள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை குழந்தைகளுக்கு தர வேண்டும் அதற்காக ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்ற உணவு பொருள்களை தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இரும்புச் சத்துகள் மிகுந்த சத்து மாவுகள் கடலை மிட்டாய் மற்றும் நவதானிய பொருட்களை குழந்தைகளுக்கு கொடுங்கள் என்று பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிபெற வந்தவர்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழ அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் முதியவர் ஒருவரிடம் உங்கள் வயது என்ன ஏன் என் காலில் விழுகிறீர்கள் என கடிந்து கொண்டார். அப்படி இருந்தும் பலரும் காலில் விழ முன்வரவே அருகில் இருந்த அதிகாரி ஒருவர் மனு கொடுக்க வருபவர்கள் யாரும் காலில் விழாத வண்ணம் அவர்களை பிடித்து கொண்டபடியே இருந்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் வருவதற்கு முன்பு வானவேடிக்கை மற்றும் மயிலாட்டம், மாடாட்டம் உள்ளிட்டவை வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனரா அல்லது பொதுமக்கள் செய்து இருந்தனரா என தெரியவில்லை.