கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் பல விதமான முறையில் பொதுமக்களை ஊக்கப்படுத்திவருகிறார்கள். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்தில் உள்ள வி.புத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவர் பூரணி சிவராஜ் தங்கள் கிராமத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவித்தார்.
அப்படி தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் அனைவருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும். மேலும், குலுக்கல் முறையில் அவர்களின் ஒருவரை தேர்வு செய்து அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோன் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்ட 87 நபர்களில் குலுக்கல் முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தனர். அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோனை முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாம்ராஜ் வழங்கினார்.
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கினார்கள். இதில் திமுக பிரமுகர் சிவராஜ் அண்ணாமலை, ஒன்றிய பொறியாளர்கள் அன்பழகன் நாகராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலா, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், செவிலியர் ஆயிஷா, ஊராட்சி செயலர் மூர்த்தி உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்குக் குலுக்கல் முறையில் செல்ஃபோன் வழங்கிய விழிப்புணர்வு தடுப்பூசி முகாம் நிகழ்ச்சி திருக்கோவிலூர் பகுதி மக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.