நாகப்பட்டினம் நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருநங்கைகளை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
நாகப்பட்டினம் காரைக்கால் புறவழிச்சாலையில் தினசரி இரவு நேரங்களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் திருநங்கைகள் தொல்லை தருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் திருநங்கைகள் அனைவரையும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அறிவுரை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்.
திருநங்கைகளிடம் பேசிய மாவட்ட எஸ்.பி நாகரத்தினம், "பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் நீங்கள் செயல்படக் கூடாது. சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம். இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சீர்கெட்டு வருவதாக இளைஞர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களால் உங்களுக்கு அச்சுறுத்தலும், ஆபத்து வரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இதுபோன்ற பிரச்சனைகள் இனி வராமல் இருக்கவேண்டும். அதோடு கரோனா பெரும் தொற்றும் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக வழிவகை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என அறிவுரை வழங்கினார்.