அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ளது 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட காரைக்குறிச்சி கோவதட்டை ஏரி. கடந்த சில தினங்களாக அதி கனமழை பெய்தும் கோவதட்டை ஏரிக்குத் தண்ணீர் வரவில்லை. இந்த ஏரியின் பாசனங்கள் காரைக்குறிச்சி மற்றும் அருள்மொழி கிராமத்தில் உள்ள வயல் வெளிகள்வரை சென்றடையும். அதேபோல் சுத்தமல்லி ஏரியிலிருந்துதான் ஏரிக்குத் தண்ணீர் வர வேண்டும். ஆனால் ஏரிக்கு சரிவர தண்ணீர் வரவில்லை.
அதன் பாசன மெயின் வாய்க்கால் தொடர்ந்து தூர்வராமல் சிதைந்து கிடக்கிறது. இந்தச் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனால் இவ்வாய்க்காலை முறையாக தூர்வாரி கடைக்கோடிவரை தண்ணீர் சென்று, பாசன வசதி நடைபெற்றால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஏறத்தாழ 1000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பாசனம் பெறுவர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.