திருச்சி இரட்டை மலை, ‘ஒண்டி கருப்பண்ணசாமி’ கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் வைத்தும், வேண்டுதல் நிறைவேறியபின் நிவர்த்திக் கடன் செலுத்துவதற்காகவும் கிடாவெட்டு நடத்துவது வழக்கம்.
இவ்வாறு கூத்துார் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் தனது நண்பர்களான தாளகுடி முத்துகிருஷ்ணன், சமயபுரம் ஜேம்ஸ் ஆகியோருடன் இரட்டை மலைக் கோயிலில் கிடாவெட்டி பூஜை செய்திட வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பூசாரிகளுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது. இதில், பாலு தரப்பினரை பூசாரிகளை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக முத்துக்கிருஷ்ணன் ஜேம்ஸ்ம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து எடமலைப்பட்டிபுதுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பூசாரிக்கு ஆதரவாக சிலர் திரண்டு வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைக்கவே, இரட்டை மலைக் கோயிலில் பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கோ பக்தர்களின் கூட்டம் பெருமளவில் இருந்துள்ளது.
இதனால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதும், பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்துள்ளது. கோயில் பூட்டப்பட்டுள்ள நிலையில் வாசலில் சூடம் கொளுத்தியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். போலீசார் யாரை சந்தேகப்படுவது என்ற குழப்பத்தில் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் இரட்டை மலைக் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.