சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமமான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், கீழ குண்டலபாடி ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் நேற்று பேரிடர் மீட்பு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எப்படி மீட்பது, எந்த உபகரணங்களைப் பயன்படுத்தி தண்ணீர் சூழ்ந்த பகுதியில் இருந்து வெளியே கொண்டுவருவது, மழை வெள்ள தண்ணீரில் மூழ்கி மயக்கமடைந்தவரை எப்படி தூக்கி வந்து முதலுதவி செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பேரிடர் தடுப்புச் செயல் விளக்கங்களைச் செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமை தாங்கினார், வட்டாட்சியர் ஹரிதாஸ், குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், விஜயன், சிதம்பரம் டி.எஸ்.பி லாமேக், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, பொதுப்பணித்துறை வல்லம்படுகை பிரிவு உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.