ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் எனத் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் இயக்குநர் மோகன் ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய வீடியோ ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில், “நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தான் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்” எனப் பேசி இருந்தார். இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி, சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக மோகன் ஜி பேட்டியளித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகத் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “சினிமா இயக்குநர் மோகன் ஜி சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்குக் கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்க்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாகச் செய்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.