திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 1,600 பேர் ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். தொழிற்சாலைகள் தனியார் நிறுவனங்களில் தங்கியிருந்து வேலை செய்வது, போர்வை மற்றும் மெத்தை விற்பனை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலையின்றி வீட்டில் முடங்கினர். மேலும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தவித்தனர். இந்த நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக மத்திய அரசு 'ஷ்ராமிக்' என்ற சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது.
இந்தச் சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வேலையின்றித் தவித்த அவர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து, தமிழக அரசுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,337 பேர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 263 பேர் என மொத்தம் 1,600 வெளிமாநிலத் தொழிலாளர்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அவர்களை வாகனங்களில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்களுக்குத் தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் அனைவருக்கும் முகக்கவசம், கைகளைக் கழுவ கிருமிநாசினி வழங்கப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதேபோல் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் அடங்கிய பையை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார். அதைத் தொடர்ந்து நேற்று (20/05/2020) 1,600 வெளிமாநிலத் தொழிலாளர்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பீஹார் மாநிலத்துக்குச் சிறப்பு 'ஷ்ராமிக்' ரயிலில் புறப்பட்டனர்.
முன்னதாகத் தேனியில் இருந்து வந்த பீகார் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றைத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் ஆகியோர் வழங்கி அனுப்பி வைத்திருந்தனர்.