நடராஜர் கோவிலில் சொத்து கணக்குகளை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழவீதி கோயில் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ், முத்துக்குமரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவில் சொத்துக் கணக்கை காட்ட மறுக்கும் தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது. கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெமினி ராதா, சமயமூர்த்தி உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்த கீழே வீதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்தபோது காவல்துறையினர் அனுமதி இல்லை என மறுத்து அவர்களை பேரிகார்டு வைத்து தடுத்தனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.