தருமபுரி மாவட்டம், ஆருர் வட்டம் வேடகட்டமடுவு பஞ்சாயத்தை சேர்ந்த அம்மாப்பேட்டை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கிணறு ஒன்று இருந்துள்ளது. அந்த கிணற்றை ஒட்டியபடி இருந்த நிலத்தின் உரிமையாளரான சிவராம் என்பவரின் வாரிசுகள், அந்த கிணத்தை மூடி நிலமாக மாற்றி பயன்படுத்தி வந்துள்ள நிலையில், அங்கிருந்த கிணறை காணவில்லை என வடிவேலு காமெடி பாணியில் புகார் மனு ஒற்றை கொடுத்துள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.
தண்ணீர் பஞ்சத்தில் பாதிக்கபட்ட அந்த பகுதி மக்களுக்கு புதிதாக கிணறு வெட்ட அரசு உத்தரவு பிறப்பித்தது. அப்போது அந்த கிராமத்தில் நீர் நிலைகள் எங்கும் இல்லாததால் பழைய கிணற்றிலே தோண்டுவோம் என்று முடிவெடுத்து அந்த கிணத்தை தேடிப் பார்த்தபோது கிணறு இருந்த இடம் நிலமாக மாறியிருந்தது. இங்கு தானே கிணறு இருந்தது எங்கே போனது என்று மக்களே சற்று ஆர்ச்சர்யப்பட்டு நின்றனர். பின்பு தான் அந்த கிணறு ஆக்கிரமிப்பு செய்து நிலமாக மாற்றியுள்ளனர் என்பதே தெரியவந்தது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் கிணற்றை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்துள்ளனர். அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரையிலும் இல்லாத நிலையில், இதனைத்தொடர்ந்து அரசு பள்ளி இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து வைத்துக்கொண்டு ஊர்மக்களிடம் அந்த இடம் என்னுடையது என்று மிரட்டி வருகிறார்கள் சிவராமின் குடும்பத்தார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அந்த இடம் இன்று வரை பட்டாவில் பள்ளி இடம் என்று தான் உள்ளது. தன்னுடைய பணபலத்தால் அரசு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, பொதுமக்களை மிரட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது அந்த கிராமத்திற்கு ஒரு கோடி செலவில் சமுதாய கூடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அந்த பழைய பள்ளி இருந்த இடத்தை கொடுத்தால் சமுதாயம் கூடம் கட்ட ஏதுவாக இருக்கும், பள்ளி இடத்தையும், பொது கிணற்றையும் மீட்டு கொடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சிவராமின் மூத்த மகன் சக்தி கூறுகையில், அந்த இடம் என்னுடைய தாத்தா காலத்தில் பள்ளிக்காக கொடுக்கப்பட்டது. தற்போது அந்த பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால், அந்த பழைய நிலத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம் என கூறினார்.