முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தாளை முன்னிட்டு தர்மபுரியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் அதிநவீன வசதிகளுடன் இரண்டடுக்கு குளிர்சாதன பேருந்து நிறுத்தத்தை நாளை (ஜூன் 3ம் தேதி) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்போகிறார் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார்.
தர்மபுரி மாவட்டத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்த அவர், இதற்கான திட்ட வடிவம் குறித்து சமூகவலைதளத்தில் கருத்து கேட்டிருந்தார். இதற்கு மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒருவர் ஒரு மாதிரி படத்தை பதிவிட்டார். ஒற்றை அடுக்கு கொண்ட அந்த மாதிரி படத்தை ஏற்ற எம்.பி. செந்தில் குமார், அதனை இரண்டடுக்காக செயல்படுத்த திட்டமிட்டு 2019-2020 ஆம் ஆண்டு அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால், கொரோனா காலகட்டத்தால் அந்தத் திட்டம் தடைப்பட்டது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு மீண்டும் தர்மபுரி, அரூர், மேட்டூர் பாலக்கோடு என பல இடங்களுக்கு திட்டமிட்டார். இதில் தற்போது முதல் கட்டமாக தர்மபுரியில் அந்த நவீன பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த நவீன இரண்டடுக்கு பயணிகள் நிழற்குடை பேருந்து நிறுத்தத்தில் சிறப்பம்சங்களாக தானியங்கி பணப்பரிவர்த்தன இயந்திர வசதி, சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின்சக்தி நிலையம், 24 மணிநேர கண்காணிப்பு கேமரா, 24 மணிநேர இலவச வை-பை வசதி, வர்த்தக விளம்பர எல்.ஈ.டி பலகை, குளர்சாதன பாதுகாப்பு பாலுட்டும் அறை, மினி நூலக வசதி, பண்பலை வதசி, படிப்பறை, செல்பி பாயிண்ட், கார்டன் சிட் அவுட், செல் சார்ஜிங் பாய்ன்ட் என ‘ஐ. லவ் டி.பி.ஐ’ என அமைக்கப்பட்டுள்ளது. 03.06.2023 தேதி அன்று எம்.பி. செந்தில்குமார் தலைமையில் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இது குறித்து தர்மபுரி எம்.பி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “தர்மபுரியில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த போது இந்த திட்டம் தோன்றியது. அதுவும் ஏசி வசதியுடன் பேருந்து நிலையம் என்றால் பராமரிப்பு என்பது மிகுந்த சிரம் என்பதால், மின்சாரம் இல்லாமல் இயங்க முழுமையாக சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் நிலையிலும், மற்றும் டிஜிட்டல் விளம்பரம், ஏ.டி.எம்., டீக்கடை என கொண்டுவந்து அதன் வருவாய் மூலமாக இதனை சீரமைத்துக்கொள்ள முடியும். தற்பேது தர்மபுரியில் நடைமுறைப்படுத்தி நாளை திறப்பு விழா செய்யவுள்ள நிலையில் மற்ற இடங்களிலும் அடுத்தடுத்து நடைமுறைக்கு வரும்” என்றார்.