Skip to main content

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு - வேலூர் சிறையில் இருந்து 3 பேர் விடுதலை

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
​    ​Dharmapuri bus fire case - 3 people released from Vellore jail



தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக அரசின் உத்தரவையடுத்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக சிறையில் இருப்போரை எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய ஆளுநரிடம் ஒப்புதல் கோரியிருந்தது தமிழக அரசு. தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததையடுத்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 
 

கொடைக்கானல் பிளசன்ட்ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினல்  வேளாண் கல்லூரி பேருந்தை எரித்தனர். பேருந்து எரிக்கப்பட்டத்தில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Dharmapuri bus fire case - 3 people released from Vellore jail


 

இந்த வழக்கில் 2007ம் ஆண்டு நெடுஞ்செழியன், மாது, முனியப்பனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உணர்வாளர்கள் கேட்டது எழுவர் விடுதலை. - கவர்னர் தந்ததோ மூவர் விடுதலை.

Published on 19/11/2018 | Edited on 20/11/2018

1991


முதல்வராக இருந்த, மறைந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக ஆட்சிக்கு வந்த காலக்கட்டம். மாதச்சம்பளம் 1 ரூபாய் பெருகிறேன் என அறிவித்துவிட்டு ஆட்சி நடத்தினார். ஆட்சிக்கு எதிராக பேசினால் குண்டர்கள் வீட்டுக்கு வந்தார்கள், எதிர்கட்களின் வீடுகளுக்குள் போலிஸ் புகுந்தது, ஜெவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் ஆசிய கண்டத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஒத்தை ரூபாய் சம்பளத்தில் இது எப்படி சாத்தியமானது ?.

 

jj

 

 

1996


தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது திமுக. முதல்வராக இருந்த, மறைந்த கலைஞர் அவர்கள். விசாரணைக்கு உத்தரவிட்டார். வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவானது. அதேப்போல் கொடைக்கானலில் இருந்த ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல்க்கு வரம்புகளை மீறி 7 மாடிகள் கட்ட அனுமதி தந்த விவகாரமும் வழக்காக பதிவானது. இப்படி என்னற்ற வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஆதாரங்களோடு பதிவு செய்தன. 

 

2000.


கொடைக்கானலில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியதை அடுத்து தொடரப்பட்ட ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பு 2000 பிப்வரி 2-ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் வழங்கினார். அதில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறார். ஒரு முன்னாள் முதல்வருக்கு கடுங்காவல் தண்டனை இந்தியாவில் அதுதான் முதல்முறை. இதைக்கேட்டு அதிர்ச்சியானார் ஜெ. களத்தில் இறங்கிய அதிமுகவினர் தமிழகம் முழுவதும் சாலைமறியல், பேருந்துகள் உடைப்பு, கடைகள் உடைப்பு, தீவைப்பு என செய்தனர். அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது.

 

dd

 

 

உயிரோடு எரிக்கப்பட்ட 3 மாணவிகள்.

 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர், கல்வி சுற்றுலா முடிந்து இரண்டு பேருந்துகளில் கோவைக்கு திரும்பிக்கொண்டுயிருந்தனர். தருமபுரி வந்த போது, அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தனர். நகரில் பெரும் பதட்டம். பெட்ரோல் பங்க் ஒன்றில் பேருந்துகளை நிறுத்திவிட்டு, பேராசிரியர்கள், பல்கலைகழக பதிவாளரை தொடர்புக்கொண்டு விவரத்தை கூறியதும் நீங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று பாதுகாப்பாக இருங்கள் என தகவல் வந்ததும் பேருந்துகளை அங்கு திருப்பினர். 3 கி.மீ தூரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேருந்து இலக்கியம்பட்டி என்ற இடத்தில் செல்லும்போது சாலைமறியல் செய்துக்கொண்டு இருந்தனர் அதிமுகவினர்.


 

அதிமுக புள்ளி ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட அனைத்து வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவர்கள் வந்த வாகனங்களும் ஒரு புளியமரத்தின் கீழ் நிறுத்தப்படுகிறது. சில மாணவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிய கீழே செல்கின்றனர். சுமார் 20 மாணவிகள் மட்டும் பேருந்துக்குள்ளேயே இருக்கின்றனர். கல்வீச்சுக்கு பயந்து அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்படுகிறது. அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் கையில் கொண்டு வந்துயிருந்த பெட்ரோலை பஸ்ஸின் முன்பகுதி, கதவு பகுதி என அனைத்து வழியிலும் ஊற்றி தீ வைத்துவிட்டு இரு பெட்ரோல் பாம்களையும் பேருந்துக்குள் வீசுகின்றனர். அடுத்த சில நிமிடங்களில் 3 மாணவிகளின் உடல்கள் கரிக்கட்டையாக கிடத்திவைக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்திற்கும் தங்கள் கட்சிக்காரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிக்கைவிட்டார் ஜெயலலிதா.


 

இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன் (இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்) ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல், மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார். 386 பேர் அரசு சாட்சிகளாக நியமிக்கப்பட்டனர்.


 

2001ல் வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் அமர்ந்திருந்தது. ஜெ முதல்வராக இருந்தார். இதனால் சாட்சிகளாக இருந்த குற்றத்தை பதிவு செய்த விருப்பாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் உட்பட அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட 22 பேருமே பிறழ் சாட்சியாக மாறி பல்டியடித்தனர். இதனால் இறந்த கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க அதன்அடிப்படையில் சேலத்துக்கு மாற்றப்பட்டது.



சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் பஸ் எரிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. இந்த வழக்கில் மொத்தம் உள்ள 386 சாட்சிகளில், 123 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்து, அதன்படி 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.



2007 பிப்ரவரி 17ந்தேதி தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 25 பேருக்கு 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கியது. 2007 டிசம்பர் 7ந்தேதி இந்த தண்டனைகளை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்பின் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.



இவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே முயற்சிகளை எடுத்தார். ஆனால் பொதுமக்கள் மீதான பயத்தால் அதனை செயல்படுத்த முடியவில்லை. அதோடு, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்மென தமிழ் அமைப்புகளின் வேண்டுக்கோள், பெரும்பான்மை பொதுமக்களின் கருத்தும் அதுவே. அது நடக்காமல் இவர்களை விடுதலை செய்தால் சர்ச்சை வரும் என தயங்கினார். அந்த தயக்கம் எதுவும்மில்லாமல் விடுதலை செய்துள்ளார் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி.

 

 

 

Next Story

எரிந்த பேருந்து, கருகிய மாணவிகள்... எரித்தவர்களுக்கு இன்று விடுதலை! - பேருந்து ஓட்டுநர் பேட்டி

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

பிப்ரவரி 2, 2000-ம் ஆண்டு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் உச்சகட்ட வன்முறையாக தர்மபுரி பேருந்து எரிப்பு. தருமபுரி, பாரதிபுரம் எனும் இடத்தில அதிமுகவினர், அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். அதில் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா எனும் மூன்று மாணவிகள் பேருந்தினுள்ளே தீயில் கருகி உயிர் இழந்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் மது என்கிற ரவீந்திரன் மூன்று பேரும் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று யாரும் எதிர்பாராமல், எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன் தமிழக அரசு ரகசியமாக விடுதலை செய்துள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டிய ட்ரைவர் கந்தசாமி 08 பிப்ரவரி 2000-ம் ஆண்டு நக்கீரனுக்கு அளித்த பேட்டி வருமாறு.  

 

dd

 

 

அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை ஓட்டி வந்தவர் டிரைவர் கந்தசாமி. அவர் நக்கீரனுக்கு அளித்த வாக்குமூலம்;

 

”மாணவ, மாணவிகள் தனித்தனி பஸ்ஸில் டூர் முடித்துவிட்டு, பையூரில் ஆராய்ச்சிகளையும் முடித்தபின் கோவைக்கு போகலாம்னு கிளம்பினோம். தர்மபுரியில் 4 முனை ரோட்டில் வரும்போது பிள்ளைகளெல்லாம் ரொம்ப பசிக்குது சாப்பிட்டுவிட்டு போகலாம்னு சொன்னதால் ஹோட்டல் முன்னாடி பஸ்ஸை நிறுத்தினோம். அப்ப, மஃப்டியில் வந்த ஒரு போலீஸ்காரர் ’ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’ன்னு சொன்னார் நான் உடனே புரபசர்கள்கிட்டே சொன்னேன். அவங்க கோயமுத்தூருக்கு போன் போட்டு பேசிவிட்டு வந்து, ’பாதுகாப்பா பஸ்ஸை ஒரு ஓரமா நிறுத்தும்படி காலேஜ் நிர்வாகம் சொல்லியிருக்கு. அதனால ஓரமா நிறுத்துங்க’ன்னு சொன்னாங்க.

 

அந்த சமயத்தில் கடைகளை எல்லாம் கல்லால் அடிச்சுகிட்டே ஒரு கூட்டம் ஓடி வந்தது. எங்க பஸ் நின்னுக்கிட்டு இருந்த ஓட்டலுக்கு பக்கத்தில் இருந்த கடைக்காரர்களெல்லாம், ’சீக்கிரம் வண்டியை எடுப்பா... உங்களால எங்களுக்கு ஆபத்து வரப்போவுது’ன்னு அவசரப்படுத்தினாங்க. என்ன செய்வதுன்னு யோசித்துகிட்டு இருக்கும்போது ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வந்தாரு. ”வண்டியில பொட்டபுள்ளைங்களா இருக்கு. சீக்கிரம் எடுங்க” என்றார். பாதுகாப்பா எங்கே நிறுத்துறதுன்னு அவர்கிட்டேயே கேட்டேன். ’1 கிலோமீட்டர் போனா எஸ் பி ஆபீஸ் வரும், அதற்குப் பக்கத்திலே நிறுத்திக்க, பாதுகாப்பா இருக்கும்’னு சொன்னாரு. 

 

நான் வண்டியை மெதுவா உருட்டிக்கிட்டே வந்தேன். அங்கங்கே கல்வீசிகிட்டிருந்ததால் ரைட் சைடில் இருந்த ஜன்னல்களை எல்லாம் மூடச் சொல்லிட்டேன். எங்க பஸ்ஸுக்கு பின்னாலேயே 100 அடி இடைவெளியில பையனுங்க பஸ் வந்துகிட்டிருந்தது. பாரதிபுரம்கிற இடத்துகிட்டே போனபோது எங்க பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. காருக்குப் பின்னால் பஸ்ஸை நிறுத்தினேன். அம்பாசிடர் காரில் குழந்தைகளுடன் ஒரு ஃபேமிலி இருந்தது. குழந்தைகளை பார்த்து பஸ்ஸிலிருந்த பிள்ளைகள் சந்தோஷமா கையை ஆட்டி டாட்டா சொல்லிக்கிட்டிருந்துச்சு. நான் பஸ்ஸிலேயே உட்கார்ந்திருந்தேன்.

 


திடீர்னு எங்கிருந்துதான் அந்த ஆளுங்க வந்தாங்கன்னு தெரியலை. பஸ்ஸின் லெஃப்ட் சைடில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. ஸ்கூட்டரில் ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். அவனை பார்த்துக்கிட்டே இருக்கும்போது திடீர்னு பஸ்ஸில் பெட்ரோல் வாசனை அடிக்க ஆரம்பித்தது. நான் பயந்துபோய் உடனே இறங்கி பார்த்தபோது ஒருவன் ஸ்கூட்டரிலும் அவன் பக்கத்தில் இரண்டு பேரும் நின்னுகிட்டிருந்தாங்க. ஒருத்தன் சட்டையின் பின் பக்கத்திலிருந்து ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை எடுத்தான். அதில் பெட்ரோல் இருந்தது.

 

 

dd

 

பஸ்ஸின் லெஃப்ட் சைடு ஜன்னல்கள் மூடாமல் இருந்ததால் அதன் வழியாக பெட்ரோலை ஊற்றத் தொடங்கினான். புரபஸர்கள் அவனிடம் ”பொம்பளப் புள்ளைகளா இருக்கு... எதுவும் பண்ணிடாதீங்க. நாங்க இறங்கிடுறோம்’னு கெஞ்சினாங்க. அதற்குள் ஒருத்தன் தீப்பெட்டியை எடுத்தான். நானும் புரபஸர்களும் அவன் காலிலேயே விழுந்தோம்; ஆனால் ஸ்கூட்டரில் இருந்தவன் கொளுத்துங்கடா’ன்னு சொன்னதும், தீக்குச்சியை கொளுத்தி பஸ்சுக்குள்ளே போட்டானுங்க. படிக்கட்டுகளிலும் பெட்ரோலை ஊத்தினாங்க.

 

பதறிப்போன புள்ளைங்களெல்லாம் சூட்கேஸை பரபரப்போடு எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. (விபத்து நடந்தாலும் பொருட்களை காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்க நினைப்பது தானே மனித இயல்பு) நானும் புரபஸர்களும் புள்ளைகளை இழுத்து இழுத்து வெளியே போட்டோம். பின்னால் வந்த பஸ்ஸிலிருந்து பையனுங்க பதட்டத்தோடு ஓடி வந்தாங்க. அதற்குள்ளே எங்க பஸ் முழுக்க புகையாயிடுச்சு... ஒன்னும் தெரியலை. பையனுங்களும் முடிந்த அளவு காப்பாற்றினாங்க. பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைச்சு, பிள்ளைகளை இறக்கிவிட்டானங்க.

 

ஒரு பையன் எங்கிருந்தோ ஒரு கடப்பாரையை கொண்டு வந்து கொடுத்தான். பின்பக்க கதவை இடித்துத் திறந்தோம். அதற்குள் பஸ் முழுக்க தீ பரவிடுச்சு. நெருங்க முடியாமல் விலகி வந்துட்டோம்.

 

பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர்களை புரபஸர்கள் எண்ணிப் பார்த்தபோது 42 பேர் தான் இருந்தாங்க. ’மொத்தம் 47 பேராச்சே... மீதி 5 பேர் எங்கே?’ன்னு பதறினோம். இரண்டு பிள்ளைங்க ஓரமா நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மீதி 3 பேரை காணலை. பஸ் பக்கம் மறுபடியும் நெருங்கியபோது எல்லாம் எரிஞ்சுப் போயிடுச்சு” என்றார் வேதனையுடன்