டெல்லியே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக் கோரியும், மார்ச் 1 முதல் 100 நாட்கள் குமரி முதல் சென்னை கோட்டை வரை விவசாயிகள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை நடத்துகிறார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு. சங்கத்தின் நிர்வாகிகளும் உடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதுதொடர்பான துண்டுபிரசுரங்களை வழங்கினர். இதன்பின்னர் ராமநாதபுரம் வந்த அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு,
விவசாய விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை, நதிகள் இணைப்பு நடைபெற வேண்டும். அதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் விரைவில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 20 லட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லியே ஸ்தம்பிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படும். மேலும், பிரதமர் வீட்டு முன்பு தூக்கில் தொங்கும் போராட்டத்தை நடத்துவோம். மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மதிக்காத ஒரே பிரதமர் மோடிதான். அண்ணா சொன்னதுபோல வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது. வாக்குறுதிகளை காப்பாற்றும் தகுதி மத்திய-மாநில அரசுகளுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.