கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு விபத்தில் காயமடைந்த ராஜேந்திரபட்டினத்தை சேர்ந்த முத்தமிழ் என்பவர் கொண்டு வரப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் ராஜ்குமார் என்பவர் விபத்தில் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு ஓய்வறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சில நபர்கள் பணி மருத்துவர் ராஜகுமாரை சந்தேகம் கேட்பதாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த மருத்துவமனை போலீசார் கேட்டபோது, போலீஸாரையும் மிரட்டி, உனது சட்டையையும் கழட்டி விடுவேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் மருத்துவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட தலைவர் டாக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் செவிலியர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மருத்துவரை பணி செய்ய விடாமலும், கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோத கும்பல் மீது மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யக் கோரியும், மருத்துவரை மிரட்டும் வகையில் பேசி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மருத்துவருக்கும் காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என கூறியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை புகாராக அளித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்யாவிட்டால், தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.